சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகக் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.
மேலும், மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்துப் போலீசார், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து 250 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் கலாஷேத்ரா சார்பில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது 58 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. அத்தோடு கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு, மாணவர்களின் பாதுகாப்பு கருதி கலாஷேத்ராவில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.