18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 291 இடங்களில் பாஜக மற்றும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.
அதேநேரம் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எடுத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் 'விவசாயி சின்னம்' பறிக்கப்பட்டு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.