முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
நான் சொல்லப்போகும் இந்த கேஸ் மொபைல் ஃபோன் இல்லாத காலகட்டத்தில் எனக்கு வந்தது. 15 நாட்களில் மகளின் திருமணத்தை வைத்துக்கொண்டு ஒரு தந்தை என்னிடம் வந்தார். தன்னுடைய மகளின் திருமணத்தை தடுக்க யாரோ சதி செய்வதாக சொன்னார். பொறுமையாக விசாரித்தபோது, மகளுக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை பல பெண்களுடன் தொடர்பிலிருப்பதாகக் கடிதங்கள் நிறைய கடிதங்கள் வந்ததைச் சொன்னார். இதற்கிடையில் அவர் திருமணத்திற்கான பத்திரிக்கைகளை உறவினர்களிடம் கொடுத்திருந்திருந்தால், மகளின் திருமணம் நின்றுவிடக் கூடாது என்றும் விரைவாக அந்த கடிதங்கள் அனுப்பும் நபரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
முதலில் மாப்பிள்ளையைக் கண்காணிக்க ஆரம்பித்தோம் அவரது நடவடிக்கையில் சந்தேகப்படும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லையென்பதால் என்னுடைய குழுவினர் குழம்பியபடி இருந்தனர். இதற்கிடையில் நான் அந்த கடிதங்களைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன் அதில் பெண் வீட்டார் வீட்டில் நடக்கும் சில விஷயங்களைக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையாக என்று தெரிந்துகொள்ளப் பெண்ணின் அப்பாவிடம் கேட்டேன். அதற்கு அவரும் அந்த கடிதங்களில் சொல்லப்பட்டிருப்பது எல்லாமே தன்னுடைய வீட்டில் நடந்ததுதான் என்று ஒப்புக்கொண்டர். எனக்கு சந்தேகம் அதிகமானதால் மணப்பெண்ணை கண்காணிக்க ஒரு குழுவை ஏற்பாடு செய்தேன். அதோடு பெண் வீட்டில் இருக்கும் அனைவரது கையெழுத்து எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள பழைய நோட்டுகளை வாங்கி பார்த்தேன். அதில் சில எழுத்துகள் அந்த கடிதத்துடன் ஒத்துப்போயிருந்தது. மேலும் அந்த கடிதங்களில் ஒரிஜினல் கையெழுத்தை மறைக்க வேண்டுமென்று கையெழுத்தை மாற்றி எழுதியதும் தெரிய வந்ததது.
இதற்கிடையில் திருமணத்திற்கான நாள் நெருங்கியது. மாப்பிள்ளையைக் கண்காணித்து நேரத்தை வீணடிக்காமல் மணப்பெண்ணைத் தீவிரமாகக் கண்காணிக்கச் சொல்லி என் குழுவிடம் கூறினேன். அவர்கள் கண்காணித்ததில் மணப்பெண் வேறொரு பையனை சந்தித்து ரகசியமாகப் பேசிய அதிர்ச்சியான விஷயம் எனக்குத் தெரிந்தது. பிறகு மணப்பெண்ணையும் அந்த பையனையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை மணப் பெண் அப்பாவிடம் காண்பித்து யார் என்று கேட்டோம். அந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான அவர், அதில் இருக்கும் பையன் மகளுக்கு ஒரு விதத்தில் மாமா முறை என்று சொன்னார். பின்பு அவரிடம், பெண்ணின் விருப்பத்திற்கேற்ப திருமணம் நடைபெறுகிறதா? என்றேன். முதலில் அவருக்கு நான் பேசுவதே புரியாமல் இருந்தது. பின்பு தெளிவாக அந்த கடிதங்கள் எழுதியது உங்களுடைய மகள்தான். அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை அந்த புகைப்படத்தில் இருக்கும் பையனை காதலித்து வருகிறாள் என்றேன். மகளின் விருப்பம் தெரியாமல் திருமணம் நிச்சயம் செய்த அந்த தந்தை மிகவும் மன வேதனைப் பட்டார். இந்த கேஸூம் முடிவுக்கு வந்தது.