Skip to main content

அமைச்சரவையில் மீண்டும் இடம்; புழல் முன் திமுக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம்

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
Re-position in Cabinet; DMK workers are playing in front of Puzhal

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. வெளியே வரும் அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது தமிழக அமைச்சரவையில் 33 பேர் உள்ள நிலையில் ஒரு இடம் காலியாக உள்ளது. தமிழக முதல்வர் டெல்லி சென்று திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தையொட்டி கரூர் பகுதிகளான கிருஷ்ணாபுரம், குமாரபாளையம், குளித்தலை, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அதேபோல தற்பொழுது புழல் சிறையின் முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஆட்டம் பாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு புழல் சிறையின் முன்னே அதிகப்படியான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்