கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 329 பேரில் 108 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி தரப்பில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாளாளர், செயலாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது இதற்காக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக வதந்திகள் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பாதுகாப்பிற்காக 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.