சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட நகைகளை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'சிதம்பரம் நடராஜர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 9 கட்டங்களாக நகைகளை சரி பார்த்து ஆய்வு செய்துள்ளனர். இந்து சமய அறநிலையத் துறைக்கு, நகைகளையோ, கணக்குகளையோ காண்பிக்க வேண்டிய அவசியம் தீட்சிதர்களுக்கு இல்லை. ஆனால் தீட்சிதர்கள், தங்களது நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே, கோவில் நகைகள் சரிபார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
இனி வரும் காலங்களில், சட்ட ஆலோசனை பெற்று, பட்டயக் கணக்காளரை கொண்டு, வெளிப்படையாக கணக்குகளை பார்த்து, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில், பொதுவெளியில் கணக்குகளை வெளியிட தீட்சிதர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வரப் பெற்ற நகைகளை சரிபார்த்ததில், எந்தவித தவறுகளையும் இந்து சமய அறநிலையத்துறை கண்டுபிடிக்கவில்லை. தற்போது 1955-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்வதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்கின்றனர். அப்படி கேட்பதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. எந்த சட்டத்தின், எந்த விதியின் அடிப்படையில், அவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள். ஏற்கனவே நகைகள் சரிபார்க்கப்பட்டு முடிவடைந்த இவற்றை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவது உள்நோக்கம் கொண்டது. தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தீட்சிதர்கள், யாருக்கும் பால்ய விவாகம் செய்து வைக்கவில்லை.அவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை''என்றார்.