சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலானது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் வி.சி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா. செல்வம் எனபவர் புகார் அளித்தார். அதன் காரனமாக சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் வைத்து அவரை அதிகாலையில் கைது செய்தனர்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. மேலும், என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும்” என கோரினார். மேலும், காவல் உறுதி செய்யப்பட்டால் தனக்கு தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட நீதிபதி அல்லி, “இவை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும். தற்போது செப். 27 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு” என தனது உத்தரவில் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக ஆர்.பி.வி.எஸ். மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதனிடையே ஆர்.பி.வி.எஸ். மணியனனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.