மதுரையில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த, சிவகாசியைச் சேர்ந்த, மதிமுக இளைஞரணி இணை அமைப்பாளர் ரவி குறித்த தகவல்கள் நெகிழ வைக்கிறது.
மதிமுக ஆரம்பித்த காலத்திலிருந்தே, அக்கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார் ரவி. வைகோ மீது அளவில்லாத பற்று வைத்திருப்பவர். சிவகாசியில் மனுச்சி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ரவி, வெளியூர்களுக்குச் சென்று பிரிண்டிங் ஆர்டர் எடுத்து வருவார். பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், ஆண்டுதோறும், வைகோ படத்துடன் பம்பர சின்னத்தையும் இடம்பெறச் செய்து, காலண்டர் தயாரித்து கட்சியினர் ஒருவர் விடாமல் கொடுத்து விடுவார். மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நேர்மையான, தூய்மையான, லட்சிய உணர்வு கொண்ட ஒரு மனிதனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கொள்கையோடு அரசியலில் பயணித்து வருபவர்.
‘தலைவர் (வைகோ) முன்னெடுக்கும் எந்த ஒரு செயலும் நாட்டு நலன் சார்ந்ததாகவே இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு அவர் காட்டிய வழியில் நான் செல்வேன்; நீங்களும் வாருங்கள்!’ என்று சக நிர்வாகிகளிடமும், கட்சித் தொண்டர்களிடமும், எப்போதும் உறுதிபடச் சொல்லி வரும் ரவி, தன் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் குறித்த குடும்ப சிந்தனையே இல்லாமல், நியூட்ரினோ எதிர்ப்பிலும் தீவிரம் காட்டி, உணர்ச்சிவசப்பட்டு, தீக்குளித்திருக்கிறார்.
‘என்ன கிடைக்கும்? எனக்கு என்னவெல்லாம் கிடைக்கும்?’ என்ற கணக்கோடு, பணப்பேய்களாக அரசியலில் அலைபவர்களுக்கு மத்தியில், ரவி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருந்துவருவது விந்தைதான்!
Published on 31/03/2018 | Edited on 31/03/2018