மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ரேசன் கடைகள் மூலம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அனைத்துப் பொதுமக்களும் எவ்வித சிரமும் இன்றி இந்தத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் பொருட்டு கூட்டுறவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளும் நாளை (30.07.2023) செயல்படும். நாளை பணி நாளுக்கு ஈடாக ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.