ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள் மற்றும் 10 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 243 பணியிடத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 12,137 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, பி.இ, எம்.இ போன்ற முதுகலைப் பட்டதாரிகள்தான் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான நேர்காணல் சென்ற 15 ஆம் தேதி ஈரோடு திண்டலில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் தொடங்கியது. தொடர்ந்து வரும் 24ஆம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் 1,500 பேர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. 20ம் தேதியும் நேர்காணல் நடைபெற்றது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த நேர்காணலில் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுக்க இதேபோல் ஒரு பணியிடத்திற்கு நூறு பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.