நியாய விலைக்கடைகளில் தரமான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டு தரமற்ற அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வாதாக தேரழுந்தூர் அருகே உள்ள கீழையூர் கிராமமக்கள் நியாயவிலைக்கடை, கூட்டுறவு வங்கி, குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் என பல இடங்களையும் முற்றுகையிட்டனர்.
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடும்பங்களுக்காக முழுநேர ரேஷன் அங்காடி தேரழுந்தூரில் செயல்பட்டுவருகிறது. தேரழுந்தூரில் இருந்து நான்கு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கீழையூர் கிராம மக்களுக்கும் தேரழுந்தூர் முழுநேர அங்காடியிலேயே விநியோகிக்கப்படுவதால், நான்கு கிலோமீட்டர் சென்றே ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் அவல நிலையில் அந்த கிராம மக்களுக்கு நேர்ந்திருக்கிறது.
அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்காக மாதம் மூன்று முறைதான் அங்கன்வாடி திறக்கப்படுகிறது. கூலி வேலைக்கு சென்றுவிட்டு, ரேஷன் பொருள் வாங்க சென்றால் ரேஷன் பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவதும், தரமற்ற துர்நாற்றம் வீசும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கிக்கணக்கு காட்டியுள்ளனர். பொதுமக்கள் எதிர்த்து கேட்டால், காசு கொடுத்தா அரிசி வாங்குறீங்க, ஓசியிலத்தான கொடுக்குறோம், என வயதானவர்கள், படிக்காதவர்கள் என்றுகூட பார்க்காமல் தரக்குறைவான வார்த்தைக்களால் திட்டுகிறார்கள் ரேஷன்கடை ஊழியர்.
பொறுமையிழந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் அங்காடியை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து தேரழுந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கிருந்து கிளம்பிய மக்கள் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு கூடிய பொதுமக்களோ, "கீழையூர், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தனி அங்கன்வாடி வேண்டும்." என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து குத்தாலம் தாலுகா வட்டவழங்க அலுவலர் தையல்நாயகி கூறுகையில், "பகுதி நேர அங்காடி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், பரிசீலிக்கப்படவுள்ளது, அதேபோல தரமற்ற அரிசி, தரமில்லாத அரிசி என்று சொல்லுவது முற்றிலும் தவறு, ஒரே லோடில்தான் ஒவ்வொரு அங்காடிக்கும் வருது, அவர்கள் கூறும் குறைகளை விரைவில் சரி செய்யப்படும்." என்றார்.