சென்னை - பெங்களூர் தேசிய நாற்கர சாலையில் ஒரு லாரி சரக்குகளுடன் கர்நாடகா மாநிலம் நோக்கி ஜீன் 19 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே இரவு 9 மணிக்குச் செல்லும்போது, முன்னே சென்றுக்கொண்டு இருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தானது.
இந்த விபத்து நடந்த அடுத்த சில நொடிகளில் லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது, அதோடு இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தத் தகவல் ஆம்பூர் காவல் நிலையத்திற்கும் ஆம்பூர் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்க போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. அரை மணி நேரத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது.
அந்த லாரியில் இருந்தது அனைத்தும் தமிழக நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா அரிசி இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு சென்ற லாரிதான் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.