Skip to main content

குழந்தை தத்தெடுப்பு சட்ட விதிகளை எளிமையாக்க வேண்டும் - ஈஸ்வரன் வேண்டுகோள்

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 


குழந்தைகளை தத்தெடுக்க கடைபிடிக்கப்படும் கடுமையான சட்ட நடைமுறைகளை தளர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். குழந்தைகள் விற்பனையை தடுக்க வேறு வழி கிடையாது என கூறிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மேலும் கூறும்போது,  "இராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி 30 ஆண்டுகாலமாக பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக பேசிய ஆடியோ வெளியாகி கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து காவல்துறை கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

 

c

 

குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளதால் இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட கும்பல் ஏழை குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை குறிபார்த்து கடத்தி குழந்தையில்லா தம்பதியினரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு அந்த பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்திருக்கிறார்கள். 


வியாபாரிகள் பொருட்களின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்வதை போல, இந்த கும்பல் ஆண், பெண் குழந்தைகளை நிறம் மற்றும் எடை வாரியாக விலை நிர்ணயித்து விற்பனை செய்திருப்பது தமிழக மக்கள் மனதில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த கும்பல் குழந்தைகளை விற்பனை செய்தது மட்டுமல்லாமல் குழந்தைகளை விலைக்கு வாங்கும் பெற்றோர்கள் பெயரிலே பிறப்பு சான்றிதழையும் வாங்கி கொடுத்திருப்பது தமிழக அரசின் பிறப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

 

ஏழை குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை பொருளாதார சுமையினால் வளர்க்க முடியாத பெற்றோர்களும் மற்றும் தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தத்து கொடுக்க முன் வருவதை பார்க்க முடிகிறது. அதேபோல பெற்றோர்களை இழந்து காப்பகத்தில் வளரும் குழந்தைகளை தத்தெடுக்க பலர் முன் வருவதையும் பார்க்க முடிகிறது. குழந்தைகளை தத்தெடுக்க வேண்டுமென்று முடிவெடுக்கும் தம்பதிகள் 45 வயதிற்கும் மேல்தான் முன்வருகிறார்கள். அதற்கு பின்பு சட்டப்படி தத்தெடுக்க வேண்டுமென்றால் 4, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

 

 அந்த சூழ்நிலையில் தான் விரைவாக தத்தெடுத்து குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவது ஒரு வழியில் குழந்தை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குழந்தையை தத்து கொடுப்பவர்களுக்கும், தத்தெடுப்பவர்களுக்கும் சிரமம் இல்லாமல் எளிமையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் சட்டப்படி நடந்து கொள்ள தான் இரு தரப்பும் விரும்புவார்கள். அப்போது இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாமல் போகும். பச்சிளம் குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாற்றங்களை கொண்டுவர ஒரு தனி குழுவை அமைத்து தமிழக அரசு ஆராய வேண்டும்." என்றார்.

 

சார்ந்த செய்திகள்