படுகர் இனத்தை சேர்ந்த மாணவி முதல் முறையாக குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து உள்ளார்.
கோத்தகிரி பகுதியில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் கோவையில் வேளாண் படிப்பு முடித்து பிறகு, ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தார். போக்குவரத்து தொழிலாளியான இவரது தந்தை ஓய்வு பெற்ற நிலையில், இவரது படிப்பு செலவிற்கு உதவ முடியாத நிலையில் இருந்ததால், பணம் படிப்பை நிறுத்த கூடாது என்ற நோக்கத்தில் , தனியார் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து அங்கேயே பணியின் போது படித்து வந்து உள்ளார்.
முதல் கட்டமாக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த இவர், தற்போது குரூப் 4 தேர்வை எழுதி உள்ளார். அதிலும் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து உள்ளார். இரவு பகலாக தான் படித்து வந்ததாகவும், தனது படிப்பிற்கான செலவிற்கு , குடும்பத்தையே நம்பி இருக்காமல் , தான் வேலைக்கு சென்று படித்தாலும், மிகுந்த ஈடுபாட்டோடும் கடின உழைப்போடும் படித்ததால் தற்போது இந்த இடத்தை பிடிக்க முயன்றதாக கூறுகிறார். கோத்தகிரி பகுதியில் படுகர் இனத்தை சேர்ந்த மாணவி, இதுபோன்று தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்து உள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து படித்து வருகிறார்.