இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து ஒருவர் தலைவர், துணைத் தலைவர் தேர்வு நடைபெற வேண்டும். போட்டியில்லாத பட்சத்தில் தேர்தல் நடைபெறாது. போட்டியென்றால் தேர்தல் நடைபெறும். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 11 பேரில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.கவை சேர்ந்தவர்கள் இருந்ததால் இருதரப்பும் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தது.
அ.ம.மு.க சார்பில் தலைவர் பதவிக்கு நின்ற பொண்ணுரங்கத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும், அ.தி.மு.க சார்பில் தலைவர் பதவிக்கு நின்ற முருகேசனுக்கு ஆதரவாக 5 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஆதரவு தந்ததாகக் கூறப்படுகிறது. தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான கூட்டுறவுச் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியின் அராஜகத்தால் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ரவி எம்.எல்.ஏ, சோளிங்கர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சம்பத் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சோளிங்கர் கூட்டுறவுச் சங்க தேர்தல் அதிகாரியை மிரட்டி, மெஜாரிட்டி இல்லாத அ.தி.மு.க அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தனராம்.
இதனை எதிர்த்து முழு மெஜாரிட்டி கொண்ட அ.ம.மு.க அணியினர் பொண்ணுரங்கம் தலைமையில் 12.10.2020 அன்று, மாநில கூட்டுறவுச் சங்க ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அதனடிப்படையில் ஆணையம் அனைத்து உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் ஆணையம் அறிக்கையை வெளியிட்டது. அதில், பொன்னுரங்கம் மனு நிராகரிக்கப்பட்டது தவறு என்றும், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் பாபு மற்றும் இந்திராணி இருவரும் மாறி மாறி முன்மொழிவு செய்துகொண்டு இருக்கிறார்கள். இது தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத்தின் விதிகள் 1988, விதி எண் 52(8) படி, தவறு. இவர்களது மனுவை ஏற்றதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சொல்லவில்லை, இதனால் கூட்டுறவுச் சங்க தேர்தல், விதிமுறைகளுக்கு உட்பட்டு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை. இதனால், இந்தத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.