ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரமலான் பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுற காட்சியளிக்கின்றன. காலையிலிருந்தே பள்ளி வாசல்கள் முன் திரளும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்தும் இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நாளின் முக்கிய நிகழ்வான பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி பிரதான சாலையில், ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரியாணியை சமைத்துவரும் இஸ்லாமியர்கள் அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் ரமலான் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதேபோல், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை மண்ணடியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.