5-வது புத்தகத் திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டப் பாரம்பரியம், வரலாறு, சுற்றுலா சிறப்புமிக்க இடங்கள் பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்துவதற்காக ராமேஸ்வரம் மரபுநடை நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் உத்தரவின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு நிகழ்வை தொடங்கி வைத்தார்.
மரபுநடை ஒருங்கிணைப்பாளர் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு பேசியதாவது, “கைப்பிடியுள்ள ஒரு வாள் போன்ற நில அமைப்பில் காணப்படும் ராமேஸ்வரம் தீவு, ஆன்மிகம், பாரம்பரியம், வரலாறு, மணற்குன்றுகள், இயற்கைத் தாவரங்களுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள தீவுகள் அரிய வகை தாவர, விலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்கின்றன.
பாண்டியர், சோழர், ராஷ்டிரகூடர், இலங்கை மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள் ஆகியோரின் கல்வெட்டுகளில் ராமேஸ்வரம் குறிப்பிடப்படுகிறது. அரியாங்குண்டு பகுதியில் கிடைத்த புத்தர் கற்சிற்பம் இங்கு ஒரு பெரிய பௌத்தப் பள்ளி இருந்ததை நிறுவுகிறது.
குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்ற அமைப்பில் முஸ்லிம்களின் கல்லறையின் மேல் கட்டப்பட்ட தூண் ‘கோரி’ எனப்படுகிறது. இவை தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. குந்துகால் மற்றும் குருசடைத் தீவிற்கு இடையில் கடலில் ஒரு கோரி உள்ளது.
ராமேஸ்வரம் தீவில் பாரம்பரியத் தாவரங்களாக மண்ணரிப்பைத் தடுக்கும் தாழை மரங்கள், அடும்புக்கொடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதேபோல் ஆப்பிரிக்கா, அரேபியாவை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன்புளி மரங்கள் தங்கச்சிமடம், ராமேசுவரத்தில் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், காயத்ரி செய்திருந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டு பாம்பன் பாலம், குருசடைத்தீவு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பொந்தன்புளி மரம், நம்புநாயகி கோயில் பகுதியில் உள்ள தாழை மரங்கள், அடும்புக்கொடி, மணற்குன்றுகள் ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர். ராமேஸ்வரம் பற்றிய சிறு நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.