நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்குச் சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வரும் 21ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அந்த 12 பேரில் திலீப், சாமி ரவி, சிவா, சத்யராஜ், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 6 பேர் தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதனை மேற்கொள்வார்கள்.
இதில் 5 பேருக்கும் ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மனதளவில் சீராக உள்ளனரா என்பது கண்டறியப்படும். மருத்துவ அறிக்கையானது இன்று அல்லது நாளை காலையில் அவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.