Skip to main content

"ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல"  - ராமதாஸ்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

ramadoss tweet omni bus bus fare issue

 

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாகப் பதிவிட்டு உள்ளார்.

 

அந்த ட்விட்டர் பதிவில், "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணக் கொள்ளை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம்போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

 

கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத் துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். 

 

ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக்கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்