பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தமிழைத் தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை சென்னையில் இருந்து இன்று (21.02.2023) தொடங்குகிறார். இந்நிலையில் இதற்கான தொடக்க விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ராமதாஸ் எழுதிய எங்கே தமிழ்? என்ற நூலை விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் வெளியிட, டில்லி தலைநகர் தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் நூலை பெற்று கொண்டார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு ஒன்றில், "வங்க மொழியின் உரிமையைக் காப்பதற்கான போராட்டத்தில் துப்பாக்கி குண்டுகளுக்கு இன்னுயிரை ஈந்த டாக்கா பல்கலை. மாணவர்களின் நினைவாக உலகத்தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழி உயிரினும் மேலானது என்பதே இந்த நாள் சொல்லும் செய்தி ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் அரியணை ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. அதற்காக எந்த ஈகத்தையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். அன்னைத் தமிழைக் காக்க ‘ தமிழைத் தேடி...’ பயணத்தை இன்று தொடங்குகிறேன். தமிழகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். அன்னை மொழிக்கு மரியாதை செய்வோம்" என குறிப்பிட்டு உள்ளார்.