பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றியதுடன், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி குரல் கொடுத்தவரான இராமசாமி படையாட்சியாருக்கு சட்டப்பேரவையில் உருவப்படம் திறந்திருப்பது மிகவும் பொருத்தமான அங்கீகாரம் ஆகும். அதற்கு முன்பாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்; கடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அவற்றை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இப்போது இராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தையும் திறந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமசாமி படையாட்சியார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா. ஆதித்தனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், ஏ.டி.பன்னீர்செல்வம், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், காலிங்கராயன், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்ட இந்த வரிசையில் விடுதலைப்போராட்ட வீரரும், இராஜரிஷி என்று போற்றப்பட்டவருமான அர்த்தநாரீச வர்மாவுக்கு இடமளிக்கப்படாதது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. பல பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி விடுதலை உணர்வை ஊட்டிய வர்மா ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் போருக்கு உரமூட்டின.
வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கியவர் அர்த்தநாரீச வர்மா ஆவார். மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரது இறுதி ஊர்வலத்துக்கு கூட யாரும் வராத போது, பாரதியாருக்காக துணிச்சலாக இரங்கல் பாடிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா மட்டுமே. அவரது இரங்கற்பா சுதேசமித்திரனில் வெளியானது. இந்திய விடுதலைக்காக வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தினார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துவதை தடுக்கக் கொண்டுவரப்பட்ட அச்சக சட்டத்தால் அர்த்தநாரீச வர்மா பாதிக்கப்பட்டார். வாரத்தில் 3 நாட்கள் வெளிவந்த இப்பத்திரிகை, அரச அடக்குமுறையால் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது. மதுவிலக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டார். நாட்டுக்காகவே வாழ்ந்த, உழைத்த அர்த்தநாரீச வர்மாவுக்கு இந்த நாடும், சமூகமும் பரிசாக வழங்கியது வறுமையைத் தான். சேலத்தில் பிறந்து தமது வாழ்வின் இறுதிக்காலத்தை திருவண்ணாமலையில் கழித்த அர்த்தநாரீச வர்மா தமது 90-ஆவது வயதில் 07.12.1964 அன்று காலமானார். அவரது சேவை இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. தமிழகத்திற்கு புகழ் சேர்த்த தலைவர்களை பெருமைப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், திருவண்ணாமலையில் அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபமும், சேலத்தில் திருவுருவச்சிலையும் அமைக்க வேண்டும். அர்த்தநாரீச வர்மா அவர்களின் வரலாறு மற்றும் பாடல்களை பாடநூல்களில் சேர்ப்பது; தமிழ் மொழியில் சிறந்த கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா பெயரில் விருது வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு விடுதலைப் போராட்ட வீரரை கவுரவிக்கும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்டி, அவரது அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்.’’