புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் மற்றும் சமூக நலத்துறை இணைந்து அரசின் மற்ற துறைகளை ஒருங்கிணைத்து ‘மக்கள் குரல்’ என்ற பெயரில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த முதலைமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மக்கள் குரல் மூலம் அந்தந்த தொகுதிகளுக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதென திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த திட்டம் மாநிலத்தில் முதன் முறையாக நெட்டப்பாக்கத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்துறை செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்றார். மக்கள் குரல் திட்டம் குறித்து வருவாய்த்துறை செயலர் அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “
புதுவை மாநில மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதை, உரம் கிடைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. குடும்ப அட்டை குளறுபடி தொடர்பான பிரச்சனைகளுக்கும், வருவாய் துறையில் பட்டா மாற்றம், குடியுரிமை சான்றிதழ் போன்றவைகளுக்கும் இந்த கூட்டங்களின் மூலம் தீர்வு காணப்படும்.
இது தவிர அரசு துறைகள் மூலம் தொழில் தொடங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குவது ஆகியவைகள் ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த மடுகரை, சூரமங்கலம், கல்மண்டபம், ஏரிப்பாக்கம், கரையாம்புத்தூர், நத்தமேடு உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் மனுக்களை வழங்கினர்.
மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாய பிரச்சனை தொடர்பான மனுக்கள் அதிகமாக இருந்தன. அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை, வேளாண்துறை, குழந்தைகள் நலம் மற்றும் மேம்பாடு, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.