சட்டம் ஒழுங்கினைக் கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்குத் தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 13 முதல் 28 வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச் சங்கிலி உள்ளிட்டவை நடத்தத் தடை விதித்தும், போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் அனுமதிகோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் காயத்ரி கந்தாடை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர அதிகாரம் உள்ளதே தவிர, நகர காவல்துறை சட்டத்தைப் பின்பற்றி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை என வாதிட்டார்.
கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது எனத் தெரிவித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கினைக் காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனைக் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். பின், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 30- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.