மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வானார் தி.மு.க.வின் எம்.எம்.அப்துல்லா.
தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஒரு இடத்திற்கு மட்டும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தி.மு.க. சார்பில் எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சீனிவாசனிடம் எம்.எம்.அப்துல்லா வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் யாரும் அறிவிக்கப்படாததாலும், சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைச் சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசனிடம் பெற்றார் எம்.எம்.அப்துல்லா.
1993- ஆம் ஆண்டில் இருந்து தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் எம்.எம்.அப்துல்லா, 2025- ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி வரை மாநிலங்களவைச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எம்.அப்துல்லா தேர்வானதன் மூலம் மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.