இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இன்று ரஜினிகாந்த் ட்விட்டரில் கரோனா பாதிப்பு மற்றும் பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு பற்றி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தற்பொழுது ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் "கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது. வெளியில் இருக்கும் கரோனா வைரஸ் 12ல் இருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே, நாடு மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் மோடி நாளை சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார். கரோனா பரவுதலை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே மக்கள் இருக்க வேண்டும். சுயஊரடங்கின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் வெளியிடப்பட்ட வீடியோ தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை நீக்கியுள்ளது.