நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், "சிஸ்டம் சரியில்லை எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்" என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். அதன்பின் நிர்வாகிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி, டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஒருசில ரசிகர்கள் அவரது அறிவிப்பை ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள், திண்டுக்கல் கல்லறை அருகே அமைதிப் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ரஜினி தனது அரசியல் வருகை குறித்த நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். உங்களுக்குக் கடவுள் மறுபிறவி கொடுத்தது மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான். அதனை உணர்ந்து அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரது மீது அன்பு கொண்ட அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். தனது இறுதியான முடிவை அவர் அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மேலும், எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளோம் என்றனர்.