சென்னை அயனாவரத்தில் உள்ளது கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம். சுமார், 900 உள்நோயாளிகள், 100 புறநோயாளிகள் என 1000 த்துக்குமேற்பட்ட நோயாளிகள் மனநலத்திற்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குதான், 19 வார்டுகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவில் 5 வார்டில் மட்டும் வாந்தி மயக்கம் என 5 க்குமேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், சிகிச்சை பலனின்றி ஒரு நோயாளி இறந்துபோனார். மற்றொரு நோயாளி ஐ.சி.யூ. வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, நாம் விசாரித்தபோது, "சாதாரண நோயாளிகளுக்கே தனக்கு என்ன பிரச்சனை? என்ன நோய் வந்திருக்கிறது? என சொல்லத்தெரியாது. அப்படியிருக்க, மன நோயாளிகளுக்கு உடல்ரீதியான பிரச்சனை என்றால் டாக்டர்கள் தானாக கண்டுபிடித்தால் மட்டுமே தெரியவரும். அட்மிட்டான நோயாளிகள் ஐந்து பேருமே ஒரே வார்டிலிருந்து அட்மிட் ஆகியிருக்கிறார்கள்.
பரிசோதித்தத்தில் 4,000 லிருந்து 8,000 இருக்கவேண்டிய வெள்ளையணுக்கள் 22,000 என கூடுதலாக இருந்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டால் மட்டுமே அதை எதிர்த்துப்போராட வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது, ஆபத்து.
மேலும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக்காரணம், வயிற்றுப்போக்கு அதிகமாகி நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத்துக்கு செல்லவேண்டிய இரத்தம் போகாமல் இருப்பதாலும் இச்செயலிழப்பு ஏற்படலாம். உடனடியாக டி.பி.ஹெச். எனப்படும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் கொழந்தைசாமி ஆய்வுசெய்து காலரா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து மற்ற நோயாளிகளுக்கும் பரவாதவாறு தடுக்கவேண்டும்" என்கிறார்கள்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மனநலக்காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகாவிடம் நாம் கேட்டபோது, "வழக்கமாக குடிநோயாளிகள் மற்றும் வழக்கமான நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை அனுமதிப்போம். அப்படித்தான், இப்போதும் அட்மிச் செய்துள்ளோம். மற்றபடி, காலராவோ தொற்றுநோயோ அல்ல" என்று மறுத்தார்.
கடந்தவாரம், இப்படித்தான் மனநலக்காப்பகத்தில் இருந்த மரக்கிளையை பொதுப்பணித்துறை ஊழியர்கள் வெட்டாமல் விட்டதால் பெண் நோயாளியின் தலையில் விழுந்து பரிதாபமாக இறந்துபோனார். இதை, வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டார்கள். தற்போது, ஒரே வார்டிலிருந்து ஒரேமாதிரியான பிரச்சனைகளோடு அட்மிட் ஆகிறார்கள் என்றால் தொற்றுநோயாகத்தான் இருக்கும். சுகாதாரத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் நமக்கு தகவல் கொடுத்த அரசு மனநலக்காப்பக ஊழியர்கள்.