திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த தம்புராஜை மாநில தலைமை நிர்வாகியான சுதாகர் அதிரடியாக தற்காலிக பணி நீக்கம் செய்தார். அதைக்கண்டு மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள தம்புராஜ் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் திண்டுக்கல் மாநகர செயலாளர் ஜோசப் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது, ‘’அண்ணன் தம்புராஜ் 35 ஆண்டுகளாக ரஜினி ரசிகராக இருந்து கொண்டு நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை கிளைகளை உருவாக்கி மன்றத்தை வளர்த்து வந்தார். அதனாலயே தலைமையும் அண்ணன் தம்புராஜ் செயல்பாடுகளை பாராட்டி மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்தது. அதன் பின் தலைவர் அரசியலில் குதித்தவுடனே தலைவரின் மக்கள் மன்றத்திற்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த மாதம் 27ம்தேதி மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்காக 250 பேரை தலைமைக்கு அழைத்து சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வைத்தார். அதன் அடிப்படையில் தலைமையும் கடந்த 15ம் தேதி நகரம், ஒன்றியம், பேரூராட்சி என மாவட்ட பொறுப்பாளர்கள் 178 பேரை நியமனம் செய்தது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களான குணசேகரன், தண்டபானி, வெங்கடேசன், ரஜினிசரவணன், சரவணன், கதிரேசன், சிக்கேந்தர், மாரியம்மாள் ஆகிய 8 பேருடன் ஒன்றிய பொறுப்பாளர்கள்109 பேர் மாநகர பகுதி செயலாளர்கள் 22பேர் மகளிர் அணி பொறுப்பாளர்கள் 7பேர் என 146பேர் அண்ணன்தம்புராஜ்சை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தலைமை எடுத்தற்காக தங்கள் பதவிகளையும் கூண்டோடு ராஜினமா செய்து விட்டனர். அதனுடைய ராஜினமா கடிதத்தை தலைவரிடம் நேரில் கொடுக்க இருக்கிறோம். அதற்கான அனுமதியை தலைமையிடம் கேட்டு வருகிறோம். இப்படி செயல்பட கூடிய ஒரு மாவட்ட செயலாளரை தலைமையில் உள்ள சிலர் தவறான தகவல்களை தலைவர் வரைக்கும் கொண்டு போய் அண்ணன் தம்புராஜ் பதவியை பறிக்க வழி செய்து இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதனால மீண்டும் அண்ணன் தம்புராஜ்க்கு தலைவர், மாவட்ட செயலாளர் பதவியை கொடுக்க வேண்டும். தவறினால் நாங்கள் தலைவரின் ரசிகர்களாக இருப்பமே தவிர, தலைவரின் மக்கள் மன்றத்தில் செயல் பட மாட்டோம் . ஆகவே தலைவர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்’’ என்று கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் திடீரென கூண்டோடு கலைக்கப்பட போகிற விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.