“தூத்துக்குடி மாவட்ட சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பாவிகள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே கண்டித்தபிறகும்கூட காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் கண் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அதிர்ச்சியளிக்கிறது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ். மேலும் அவர்,
“ஒரு நீதித்துறை நடுவரைப் பார்த்து ஒரு கடைநிலை காவலர் ‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று மிரட்டுகிறார் என்றால் அதை வெறும் மன அழுத்தமாக எடுத்துக்கொள்ளமுடியாது. அந்த, காவலருக்கு மேலுள்ள எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளின் அதிகாரத் திமிறை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, காவல்நிலையங்களில் நடந்த லாக்-அப் கொலைகளிலிருந்து தப்பித்ததால் ஏற்பட்ட அலட்சியத்தின் வெளிப்பாடுதான் இது.
அதேபோல், தமிழகம் முழுக்க கைதிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் என்று ‘மாவுக்கட்டு’ போடப்பட்ட கைதிகளின் செய்திகளை கண்டிக்காததன் விளைவுதான் இன்று அப்பாவிகள் அடித்துக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு, டாக்டர் வெண்ணிலா உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் உடைந்தையாக இருந்திருப்பது மாபெரும் குற்றம். எவ்வளவு பெரிய தண்டனைக் கைதியாக இருந்தாலும் கொடூரமானவராக இருந்தாலும் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு. ஆனால், தவறே செய்யாத அப்பா- மகன் இரண்டுபேரையும் பின்புறத்தில் இரத்தம் சொட்ட சொட்ட லத்தியால் அடித்து சிதைத்திருக்கிறார்கள் கொடூர காக்கிகள். இவர்களை, மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கவேண்டிய டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் ஃபிட்னெஸ் கொடுத்து சிறைக்கு அனுப்பியதன் விளைவுதான் அவர்கள் இருவரும் இறப்பதற்கு மிகமுக்கிய காரணம்.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் காவல்துறையால் சித்திரவதை செய்யபப்பட்டு கொண்டுவரப்படும் கைதிகளை சரியான முறையில் அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால், சிறைகளில் அடைக்கும்போது சிறைத்துறை டாக்டர்கள் பரிசோதிக்கும்போது, காயங்கள் இருப்பதை கண்டுபிடித்துக் கேட்டால், ‘அரசு மருத்துவமனை டாக்டர்களே விட்டுவிட்டார்கள், நீதிபதியும் அனுமதித்துவிட்டார். நீங்கள் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?’ என்று காவல்துறையால் சிறைத்துறை டாக்டர்கள் மிரட்டப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. ஆக, போலீஸும் டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலைதான் இது.
மருத்துவ விதிகளுக்கு எதிராக நடந்துகொள்ளும் டாக்டர்கள் மீது தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் காவல்துறைக்கு அடிபணியாமல் இருப்பார்கள். அதேபோல், டாக்டர்களை மிரட்டும் காவல்துறை மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
மேலும், ஒரு சில காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் இதுபோன்று நடந்துகொள்ளும் பட்சத்தில் ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் மருத்துவத்துறை மீதுள்ள நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. கொலை வழக்கு பதிவு செய்திருப்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. மேலும், கடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படவேண்டும். பாமர மக்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் இதுபோன்று நடக்கும் பட்சத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுகள் செய்யும்போது கைது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமில்லாமல் மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்” என்று கூறினார். இவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.