தஞ்சாவூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பொது சுடுகாடு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட மாநாடு நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகள், இரு நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 22 பேரூராட்சிகளிலும் பொது சுடுகாடு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக் கோயில்களில் அனைத்து சாதியினரும் வழிபடவும், சம உரிமை பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட, அருந்ததிய சமூக மக்கள் வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மாவட்டத்திற்குள்பட்ட நகராட்சி, மாநகராட்சியில் புதை சாக்கடை குழியில் இறங்கி மனிதர்கள் வேலை செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரிக்கான மாணவர் விடுதியைச் சீரமைத்து தர வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் பேசுகையில், " சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டை கடந்தும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் சுடுகாட்டிற்காக போராடும் அவலம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது, பல இடங்களில் சுடுகாட்டிற்கு போவதற்கு பாதைகிடையாது, பாலம் கிடையாது, தண்ணீரில் நீந்தியும், சாகுபடி செய்யப்பட்ட வயல்களின் வழியாகவும் செல்லவேண்டிய அவலமும் நீக்கிறது, அதனால் அரசு பொது சுடுகாட்டை உறுவாக்கிட முன்வரவேண்டும்" .என்று பேசிமுடித்தார்.