தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.