விருதுநகர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவலாயங்களில் பணியாற்றும் கிறிஸ்தவ ஜெப ஊழியர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அந்நிகழ்ச்சியில் பேசினார்.
“விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 475 திருச்சபைகளில் பணியாற்றும் ஜெப ஊழியர்களுக்கு அரிசி வழங்கி வருகிறோம். ஏழைகளுக்குச் செய்யும் தொண்டே, இறைவனுக்குச் செய்யும் தொண்டென எல்லா மதங்களும் கூறுகின்றன. நமது வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்று இஸ்லாம் மதம் சொல்கிறது. ஏழைக்கு நல்லது செய்பவன் இறைவனுக்குக் கடன் கொடுத்தவன் ஆவான் என்று பைபிள் கூறுகிறது. ஏழைகளுக்குச் செய்யும் தொண்டானது, இறைவனை வழிபடுவதற்குச் சமமானது என்று பகவத்கீதை சொல்கிறது. ஆக, எல்லா மதங்களும் ஏழை எளிய மக்களுக்கு உதவச் சொல்கிறது. உதவிகள் செய்வதன் மூலம் இறைவனைக் காணலாம். வேறு என்ன வழிபாடு செய்தாலும் இறைவனைக் காணவே முடியாது. எல்லா மதங்களும் இதையே கூறுகிறது. கரோனா வைரஸ் தாக்குதல் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளது. அதனாலேயே, ஒருவருக்கொருவர் உதவி செய்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் மதங்களை எல்லாம் தாண்டி மனிதாபிமானமே ஓங்கி நிற்கிறது.” என்றார்.
போஸ்டர்களிலும், பேனர்களிலும், அமைச்சரின் விசுவாசிகள் ‘ஆன்மிகச் செம்மல்’ என்று குறிப்பிடுவது போலவே, பேச்சிலும் செயலிலும் இறங்கிவிட்டார் போலும், கே.டி.ராஜேந்திரபாலாஜி!
‘ஏழையின் சிரிப்பில் இறைவன்!’ அன்றே சொன்னார் அண்ணா!