Skip to main content

மத்திய அரசின் திட்டங்களை நிறுத்திய சனாதன கருத்து-திமுக அரசு மீது ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Rajendra Balaji accuses the Sanatana opinion-DMK government of stopping the central government's projects



சிவகாசியில் அண்ணா 115-வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்கள் குறித்த விளக்கப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

 

அவர் பேசியதாவது, ''மறைந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் சாராயக் கடைகளும் கள்ளுக் கடைகளும் திறக்கப்பட்டன. தள்ளாத வயதிலும் மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று மதுக்கடைகள் வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் தொடர்ந்து மதுக் கடைகளையும் கள்ளுக்கடைகளையும் கலைஞர் திறந்துவைத்தார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கிய மதுக்கடைகளை இன்று வரை மூட முடியவில்லை.  அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி  ஆட்சி நடந்தபோது, இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கறுப்புச் சட்டை போட்டு கறுப்புக்கொடியைப் பிடித்து மதுக்கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று வரை அவர்கள் மதுக்கடைகளைப் பூட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

சொல்வதை திமுக என்றைக்கும் செய்வதே கிடையாது. திமுக ஆட்சியில் மிகப்பெரிய திட்டங்கள் ஏதாவது வந்திருக்கிறதா? அதிமுக ஆட்சியில்,  ஜெயலலிதா ஆட்சியில்,  எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைதான் திமுக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர்  அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது  ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி எல்லா மாணவர்களுக்கும் சத்துணவு திட்டம் கொண்டு வந்து உணவு அளித்து ஊக்கம் கொடுத்து படிக்க வைத்தார்.ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்  எம்ஜிஆர்.  அவர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

 

ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு  அதிமுக ஆட்சி கலைந்துவிடும், சட்டமன்ற உறுப்பினர்கள் சிதைந்து விடுவார்கள் என்றெல்லாம் திமுக தலைவர்கள் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் நல்லாட்சி நடத்தினார்.  எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

 

மத்திய அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக கொண்டுவந்தது. ஆனால் திமுக அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து,  திட்டங்களைத் தடுத்து வருகிறது. எந்த திட்டங்களையும் திமுக அரசால் கொண்டுவர முடியவில்லை. ஒரு கலெக்டரை எதிர்த்து செயல்பட்டால் ஒரு ஊராட்சி நிர்வாகம் செயல்பட முடியுமா?   மத்திய அரசுடன் மோதி, சனாதனத்தைப் பற்றி பேசி,  தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் சகோதரர்களாக ஒற்றுமையாக இருந்துவரும் இந்த நாட்டில், சனாதானம் என்ற போர்வை மூலம் மத மோதலை உருவாக்குகின்ற பணியை திமுக செய்து கொண்டிருக்கிறது. இதை தடுக்கின்ற பணியை அதிமுக செய்துகொண்டிருக்கிறது.

 

சிவகாசியில் பெரியார் காலனியை இடிக்கும் தருணம் வந்தபோது ஜெயலலிதாவிடம் கூறினேன்.  ஏழை, எளிய மக்கள் என்று சொன்னேன். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞரை நியமித்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்துப் பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.  இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன். உடனடியாக குடிசை மாற்று வாரியம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் வீடுகளை கட்டிக் கொடுக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இதே சப் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துதான், அவர்களுக்கான வீட்டுச் சாவியை கொடுத்தேன். தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் பொதுமக்களை திமுக துன்புறுத்தி வருகிறது.  அப்பா  போட்டோவைக் கூட எடுக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.  பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வீடுகளை இடிக்கின்றனர்.

 

அதிமுக ஆட்சி காலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பட்டாசு ஆலை அதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் பதிக்கப்படுகின்றனர். எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதியில் மிகப் பெரிய வெள்ளம் வந்து ஏராளமானோர் இறந்துவிட்டனர். அந்தக் காலகட்டத்தில் இப்போது இருப்பதுபோல்  வாகன வசதிகள் எதுவும் கிடையாது. அன்றைய முதல்வர் எம்ஜிஆர்  உடனடியாக விமானம் மூலம் மதுரை வந்து,  கார் மூலமாக கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றுப்பகுதிக்குச் சென்றார். இதனை கேள்விப்பட்ட நான்,  அன்று  எம்.ஜி.ஆர். காரின் பின்னால் ஓடினேன். எம்ஜிஆரை பார்த்த பிறகுதான் நின்றேன். ஆற்றுப்பகுதியை பார்வையிட்ட எம்.ஜி.ஆர்., உடனடியாக பாலம் கட்ட உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கினார்.  

 

ராஜபாளையம் ரயில்வே பாலம், விருதுநகர் ரயில்வே மேம்பாலத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்தான். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம்,  திருத்தங்கல் ரயில்வே  மேம்பாலம், இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம்  ஆகிய மூன்று ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அரசாணை போட்டு,  பணம் ஒதுக்கி விட்டுத்தான் நாங்கள் ஆட்சியைவிட்டு இறங்கினோம். இன்று வரை அந்தப் பணியை திமுக தொடங்கவில்லை.

 

சிவகாசி மாநகராட்சிக்கு அற்புதமான கட்டிடத்தை நாங்கள் கட்டிக் கொடுத்தோம். அண்ணா காலனி. எம்ஜிஆர் காலனி. இந்திரா நகரில் வசித்த பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியில்தான் பட்டா வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் நடப்பதுபோல், குடியிருப்பவர்களை விரட்டியடிக்கவில்லை. குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கி வாழ்வாதாரத்தை நாங்கள் கொடுத்தோம். அண்ணா காலனியை இடிக்க முற்பட்டபோது இரவோடு இரவாக பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது அதிமுக அரசு. இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த தொகுதிக்கு செய்த வளர்ச்சி பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சிவகாசி தொகுதி அருமையான தொகுதியாக ஆக்கிய பெருமை எனக்கு உண்டு ” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்