திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் புலிவலம் ஊராட்சி சபை கூட்டத்தை வில்வனம்படுகையில் தொடங்கிவைத்தார்.
கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,
இந்த பயணத்திற்கு என்ன முழக்கத்தை வைத்திருக்கிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் ஓரளவிற்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்.. மக்கள் மனங்களை வெல்வோம்...
ஒரு கோவிலுக்கு வந்த உணர்வை பெறுகிறேன். கிராமம் என்பது ஒரு கோவில். மகாத்மா காந்தி சொல்வார் கிராமம்தான் கோவில், கிராமம் தான் உயிர்நாடி என்று. அப்படிப்பட்ட கிராமத்திற்கு வந்திருக்கிறோம். உண்மையாக சொன்னால் இதுபோன்ற கிராமத்தில்தான் அரசியலே ஆரம்பித்திருக்கிறது.
முன்பெல்லாம் குடவோலை முறையில்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த குடையோலை முறை காஞ்சியில் உத்திரமேரூரிலும், ஒருங்கிணைத்த தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பக்கத்தில் பள்ளிப்பாக்கம் என்ற ஊரிலும் நடைமுறையில் இருந்ததற்கான கல்வெட்டுகள் இருக்கிறது. இதில் என்ன ஒரு ஆழகான ஒற்றுமை பாருங்கள் அண்ணா பிறந்த காஞ்சியிலும், கலைஞர் பிறந்த தஞ்சையிலும் குடையோலை முறை இருந்ததுதான் அழகே.
இடைத்தேர்தலை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆனால் ஓர வஞ்சனையோடு செயல்பாடுகள் இருக்கிறது. உதாரணமாக 18 எம்.எல்.ஏ தொகுதிகள் காலியாக உள்ளது. அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி உள்ளது. ஆனால் பல்ஸ் பார்ப்பதற்காகவே மத்திய அரசு திட்டமிட்டு திருவாரூருக்கு மட்டும் தேர்தலை அறிவித்துள்ளது.
நான் இந்த கிராம சபையை கூட்டியதற்கு காரணம் என்னவென்றால். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இன்று மத்தியில் இருக்கின்ற ஆட்சியால் என்னென்ன கஷ்டங்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துகொண்டிருக்கிறது என உங்களுக்கு தெரியும். பெரிய பெரிய முதலாளிகளுக்காக மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறினார்.