புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக கிளையில் தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியை சேர்ந்த புண்ணியமூர்த்தி நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் அதிகாலை மதுரை பேருந்தில் பணிக்கு செல்ல தயாராவதற்காக கடந்த ஏப்ரல் 30 அன்று பணிமனையில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுவரும்போது கீழே கிடந்த பாம்பு கடித்து கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்த சக ஊழியர்கள் பணிமனையில் பாதுகாப்பு இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்த்துடன் அனைவரும் பேருந்துகளை இயக்காமல் புண்ணியமூர்த்தியின் துக்கத்தில் கலந்து கொண்டனர். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுகு பணிமனை நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுவிட்டது.
இந்த நிலையில் தான்.. பணியில் இருக்கும்போது உயிரிழந்த தொழிலாளி புண்ணியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், வாரிசுக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும். பணியின் போது பாம்பு கடித்து இறந்தவரின் இறப்புக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு போடப்பட்ட ஆப்சென்டை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் பணிக்காலத்தில் பொறையார் மற்றும் கந்தர்வகோட்டை கிளைகளில் நிர்வாக அலட்சியம் காரணமாக 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர் மீது பல்வேறு ஊழல், முறைகேடுகளுக்கான குற்றச்சாட்டுகளும் உள்ளன. எனவே, அவர்மீது விசாரணைக் கமிசன் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் ஓய்வூதியப் பலன்களை ரத்துசெய்ய வேண்டும். டீசலுக்கான கிலோமீட்டரை அதிகப்படுத்தி தொழிலாளியின் வேலைப்பளுவை கூட்டக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்hபட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரசுப் போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) புதுக்கோட்டை மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ஆர்.வாசுதேவன், மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், செயலாளர் க.முகமதலிஜின்னா ஆகியோர் பேசினர்.