சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்கவேண்டும் என வலியுறுத்தி கடந்த 58 நாட்களாக தொடர்ந்து அறவழியில் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவர்களின் 58 நாள் போராட்டத்தின் எதிரொலியாக பிப் 2- ந் தேதி தமிழக அரசு மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்தநிலையில் மாணவர்கள் அனைவரும் மருத்துவ கல்லூரிக்கு பணிக்குச் சென்றனர். தற்போது மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தும் போது அவர்களிடம் அரசு கட்டணத்தை வசூலிக்காமல் மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே வசூலிக்கும் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் மாணவர்கள் அரசாணையில் இந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என உள்ளது என அரசாணையை காட்டி கூறியுள்ளனர். அதனை ஏற்காத பல்கலைக்கழக நிர்வாகம், பழைய கட்டணத்தை கட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இதனால் வேதனையடைந்த மாணவர்கள் தமிழக அரசு அறிவித்த அரசு ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் மீண்டும் துவங்கியுள்ளதால் மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழல் உள்ளது. எனவே தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.