திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதை வழியாக தினந்தோறும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் அந்த சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரம் மழைநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பள்ளி வாகனங்கள் மற்றும் விவசாய நிலங்களில் விளையக்கூடிய விலைப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அவ்வப்போது சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை மின் மோட்டார் கொண்டு அப்புறப்படுத்தினாலும் சில மணி நேரத்திற்குள் மீண்டும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மக்கள் சுற்றிச் செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவர்களும் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களும் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்வதால் காலதாமதம் ஆகிறது. இதன் காரணமாக ஆபத்தை உணராமல் சுரங்கப்பாதையின் மேலே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்கு முன்பாக இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.