அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காரைக்காலிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய இரண்டு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக விழுப்புரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனமழை காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டய தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.