தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்களும், கேரள கடல் பகுதிகளுக்கு 3 நாட்களும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பொழிந்தது. சென்னையில் கிண்டி, போரூர், வடபழனி, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், மயிலாப்பூர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூரில் பரவலாகவும் மழை பொழிந்தது. அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது.