திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்குச் சொந்தமாக ஆரணி நகரில், 4 அடுக்கு மாடி வணிக வளாகம் உள்ளது. 2017ல் இந்தக் கட்டிடம் உட்பட சில சொத்துகளை தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.4 கோடி கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தாததால், அதனை ஏலத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வங்கி நிர்வாகம். அதன்பின் நடந்தவற்றை நம்மிடம் கூறிய வினோத்குமார், “அந்த கட்டிடத்தோடு, வேலப்பாடி கிராமத்தில் உள்ள எங்கள் வீடுகளை இணைத்துக் கடன் வாங்கியிருந்தோம். அதில் வணிக வளாகத்தை மட்டும் தனியே பிரித்து எடுத்து விற்பனை செய்து கடன்களை அடைக்க முடிவு செய்தோம். அதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அப்போது அந்தக் கட்டிடத்தை நான் வாங்கிக்கொள்கிறேன் என முன்வந்தார் ‘அரசு டிரேடர்ஸ்’ என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அரசு. நாங்களும் சரியென்றோம். 10 லட்ச ரூபாய் வங்கிக் கடனை முதல் கட்டமாகச் செலுத்தினார். அதன்பின், கரோனா வந்து, எல்லாம் முடங்கியது. வங்கியும் கடனைக் கட்ட தவணை வழங்கியது.
அந்த கட்டிடத்தில் உள்ள கடைகளை வாடகைவிட முயன்றபோது, 'அந்த கட்டிடத்துக்கு உரிமையார் அரசாமே' என்றார் வாடகைக்கு வர முயன்ற ஒருவர். அதிர்ச்சியாகி விசாரித்தபோது, கட்டிடத்தின் இ.பி. கனெக்ஷன் அரசு பெயரில் மாறியிருந்தது தெரிந்தது. இ.பி.-யில் விசாரித்தபோது, வி.ஏ.ஓ. அளித்த சான்றிதழ்படி இணைப்பு வழங்கினோம் என்றார்கள். வி.ஏ.ஓ.விடம் விசாரித்தபோது, நான் சான்றிதழ் தரவில்லையென்றார். இதுவெல்லாம் புகாராக ஆர்.டி.ஓவிடம் தந்தபோது, விசாரணை நடத்தி இடத்தின் உரிமையாளர் நான் தான் எனச் சான்றிதழ் வழங்கினார். ஆனாலும் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்யவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
என்னை மட்டுமல்ல இதைப்போல் பலரையும் சீட்டிங் செய்திருப்பதை நான் விசாரித்தபோதுதான் தெரிந்துகொண்டேன். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அவர் ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்பனை தொழில்களையும் செய்கிறார். கடந்த இரண்டு வருடத்தில் ஆரணி நகரத்தை ஒட்டியுள்ள பையூர், வேலப்பாடி கிராமங்களில் வீட்டு மனை அமைத்தும், அதில் சில மனைகளில் வீடுகள் கட்டி விற்பனையும் செய்துள்ளார். 17 வீடுகள் கட்டி விற்பனை செய்துள்ளதாக தெரிந்து, அதுபற்றிய தகவல்களை ஆர்.டி.ஐ மூலமாக பெற்றபோது, சில வீடுகள் மட்டுமே ஒரிஜினலாக சிலர் வாங்கியுள்ளார்கள். மற்றவையெல்லாம் அவரிடம் வேலை செய்பவர்கள் பெயரில் வாங்கியதாக ஆவணங்கள் சொன்னது. அவர்கள் எல்லாம் இந்தியன் வங்கி, கனரா வங்கி உட்பட சில வங்கிகளில் ஹவுஸிங் லோன் மூலம் வீடு வாங்கியதாகத் தெரிந்தது. வங்கிகளுக்கு தரப்பட்ட பிளானிங், வரி ரசீது உட்பட சில ஆவணங்கள் போலியானது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், வங்கிகளும் இதுபற்றி நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள்” என்றார்.
இதுபற்றி இரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் தரணியின் கணவர் வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, “அப்ரூவல் இல்லாமல், போலியான ரசீதுகளைப் பயன்படுத்தி வீடுகள் விற்பனை செய்திருக்காங்க. மனைகள் விற்பனை செய்திருக்காங்கன்னு புகார் வந்திருக்கறதா பி.டி.ஓ. அலுவலத்தில், வங்கி அதிகாரிகள் வந்து விசாரிச்சிட்டு போனாங்க. அந்த இடத்துக்கான வரைபடம், அனுமதி ரசீதுகள் எதுவும் எங்களிடம் இல்லை. ஆவணத்தில் உள்ள கையெழுத்து, பழைய தலைவருடையதான்னு கேட்டாங்க. அதை அவரிடம் தான் கேட்கனும்னு சொன்னேன். அந்தப் பகுதிக்கு புதுசா வீட்டு வரி ரசீது போட வேணாம்னு சொல்லிட்டாங்க. அதனால் போடல. புகார் தரச்சொன்னாங்க காவல் நிலையத்தில், ரிஜிஸ்டர் ஆஃபிஸில் தந்திருக்கேன்.” என்றார்.
குற்றச்சாட்டப்படும் அரசு ஃபிளாட்ஸ் உரிமையார் அரசுவை தொடர்பு கொண்டபோது, அவர் நமது லைனை எடுக்கவில்லை.
குறிப்பிடும் இடங்களில் வாடகை வைக்கச் சென்றவர், அதை தன்னுடைய இடம் எனச் சொல்லி வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயன்றபின்பே விவகாரம் வெளியானது. இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் எதுவுமில்லை. லோன் வாங்கியதில் சீட்டிங் நடந்ததா எனத்தெரியாது, ஆனால் அந்த இடங்களுக்கு அப்ரூவல் வாங்கியதாகத்தான் தகவல்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.