விழுப்புரம் மாவட்டம் தெளி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் பிரபு இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேர் சத்யா நகர் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனி நடத்திவரும் நிஷாந்த் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரபுவிடம் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள டிராக்டர் கம்பெனியில் இருந்து சுமார் 6 லட்சம் மதிப்பிலான டிராக்டரை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக நிஷாந்த் கூறியுள்ளார்.
இதை நம்பிய பிரபு, கடன் வாங்கி 6 லட்ச ரூபாய் பணத்தை நிஷாந்திடம் கொடுத்துள்ளார். ஆனால், நிஷாந்த் கூறியபடி பிரபுவுக்கு டிராக்டர் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பிரபு இதுகுறித்து நிஷாந்திடம், பலமுறை பணம் கேட்டு வந்துள்ளார். அவர் பணமும் கொடுக்கவில்லை. டிராக்டரும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை ஏமாற்றும் நோக்கத்தில் நிஷாந்த் நடந்துகொண்டுள்ளார். சமீபத்தில் பிரபு நிஷாந்திடம் பணம் கேட்கச் சென்றபோது, அவரது மனைவி காயத்ரியும் நிஷாந்த் உடன் சேர்ந்து பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பிரபு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். எஸ்.பி., பிரபுவின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் போலீஸார் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.