மழை காரணமாக வரத்து குறைவு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம், சில்லறை விற்பனை நடைபெறுகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், ஒட்டன்சத்திரம், பெங்களூ,ர் ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து வரத்தும் குறைவாக வருகிறது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கடந்த வாரத்தோடு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
ஈரோடு வ .உ.சி மார்க்கெட்டை பொறுத்தவரை தினமும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா குப்பம் போன்ற பகுதியில் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனையானது. அதன் பிறகு விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது.
தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இன்று வ.உ.சி மார்க்கெட்டிற்கு 2,600 தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இதன் காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.80 - க்கு விற்பனையானது. இன்று தாளவாடி, ஆந்திரா குப்பம் பகுதியில் இருந்து தற்காலிக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 50 வரை உயர்ந்துள்ளது.