சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டுவந்த நிலையில், காலை 8.45 மணி முதல் மிதமான மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதனை தாண்டியும் வெயில் கொளுத்திவந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் இருந்து திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது. வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.