Skip to main content

மழை வெள்ள பாதிப்பு; தூத்துக்குடியில் மத்தியக் குழுவினர் ஆய்வு!

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
 Rain and flood damage Central team inspection in Tuticorin

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வந்த மத்தியக் குழுவினர் டிசம்பர் 19 ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கே.பி. சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைக் கணக்கிட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை டிசம்பர் 20 ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாம் கட்டமாக மத்தியக் குழுவினர் 7 பேர் ஆய்வு செய்து வருகின்றனர். கே.பி. சிங் தலைமையிலான இந்த குழுவில் ரங்கநாத் தங்கசாமி, பொன்னுசாமி, ராஜேஷ் திவாரி, விஜயகுமார் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய உள்ளனர். 

சார்ந்த செய்திகள்