ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்து 25 ஆண்டுகளாகியும் அரசுப்பணி வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர் நாள் முகாம் நேற்று (11-03-24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமா தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு, பட்டா மாற்றம் உள்ளிட்டவை குறித்து 688 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 25 ஆண்டுகளாக தங்களுக்கு பணி வழங்காததால் வரவுள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்த மாணவர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர். இது தொடர்பாக, ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பற்ற, ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்த மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் ரயில்வே தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சி முடித்த நிலையில் சுமார் 17,000 பேர் பணிகளுக்காக காத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு மத்திய அரசு பணி நியமனம் வழங்கவில்லை. சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து பணி வழங்காமல் புறக்கணிப்பு செய்யப்பட்டு வருகிறோம். இதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை திரும்ப ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், ஆவின் நிறுவனத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை மீண்டும் வழங்கக்கோரி முகவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆவின் பால் விற்பனை முகவர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘திருச்சி ஆவின் ஒன்றியத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடந்த மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு, புதிதாக டிலைட் நிறத்திலான பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், ஒரு சதவிகிதம் கொழுப்பு குறைக்கப்பட்டது. மேலும் 200 மி.லி பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.6 கூடுதலாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால் பாக்கெட் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே புதிய டிலைட் நிறத்தில் வழங்கப்படும் பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்திவிட்டு பச்சை நிற பாக்கெட்டுகளை மீண்டும் விநியோகிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.