உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்தது.
இந்த நிலையில் இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்ததாகவும், அப்போது அதில் சமைத்துக்கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியுள்ளது. ரயிலில் எரிவாயு சிலிண்டர் எடுத்து வருவதற்குத் தடை இருந்தும் பயணிகள் எரிவாயு சிலிண்டர் எடுத்து வந்துள்ளனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலரும் ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நடத்த இடத்தில் மாவட்ட ஆட்சியர், ஐஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதிகாலை 5 மணியளவில், பயணிகள் எரிவாயு உருளை மூலம் டீ போட்டதாகவும், அப்போது இந்த விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி முழுவதும் பரவியிருக்கலாம். இறந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒருவர் யார் என்று தெரியவில்லை என ஆய்வுக்குப் பின் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 9 பேரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். ரயில் பெட்டியிலிருந்த பயணிகள் சட்ட விரோதமாகப் பயன்படுத்திய சிலிண்டரால் தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.