
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 48 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, வெறும் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டெல்லி தேர்தல் தோல்வி பஞ்சாப் மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. 117 இடங்கள் கொண்ட பஞ்சாப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 92 இடங்கள் கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது டெல்லி தோல்விக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், பஞ்சாப்பில் 32 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தன்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பர்தாப் சிங் பஜ்வா கூறியதாவது, “முதல்வர் பகவந்த் மான் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால், அவரை நீக்க முடிவு செய்யும்போது, பகவந்த் மான் தனது பைகளை மூட்டை கட்டி பாஜகவில் சேருவார். எனது 45 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில், ஒருபோதும் தவறான அறிக்கையை வெளியிட்டதில்லை.
இந்த ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் காங்கிரசுக்கு இல்லை என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம். நான் மீண்டும் சொல்கிறேன், 32 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். எம்எல்ஏக்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் கூட என்னுடன் தொடர்பில் உள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இது அவர்களின் கடைசி பதவிக்காலம் என்பது தெரியும். அவர்கள் புதிய கட்சிகளுக்கு சீட்டுகள் கிடைக்கத் தேடுகிறார்கள். நான் 32 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். யாரை கொண்டு வர வேண்டும், யார் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது, யார் வெற்றி பெறவில்லை என்பதைப் பார்ப்போம். அது சரியான நேரத்தில் நடக்கும்” என்று கூறினார்.