ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் போலீசார் பிடிக்க முயலும் போது பதில் தாக்குதல் நடத்தும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில் சுசீந்திரம் அருகே ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தூத்துக்குடி செல்வம். இவர் மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். சுசீந்திரம் பகுதியில் மறைந்திருந்த ரவுடி செல்வதை பிடிக்க உதவி காவல் ஆய்வாளர் லிபி பால்ராஜ் பிடிக்க முயன்ற போது அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்பொழுது அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு ரவுடி செல்வத்தை பிடித்துள்ளார்.காயத்துடன் மீட்கப்பட்ட ரவுடி செல்வம் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுசீந்திரத்தில் இருந்து தூத்துக்குடி தப்பிச்செல்ல முயன்ற ரவுடியை போலீசார் சுட்டு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.