Skip to main content

கான்ஸ்டபிள் வீட்டில் ரெய்டு...  அதிர்ந்துபோன மாவட்ட போலீஸ்!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Raid in police home at erode

 

ஈரோட்டில் ஒரு போலீஸ் ஏட்டு ஒருவர் வீட்டில் ரெய்டு நடந்திருப்பது ஈரோடு மாவட்ட போலீசார் எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

 

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியில் வசித்து வருபவர் வேல்குமார். மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச்சில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி. கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார்.

 

ஒரு சாதாரண போலீஸ் தான் என்றாலும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி என உயர் போலீஸ் அதிகாரிகளே வேல்குமாரை கண்டால் மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். கடந்த 10 வருட அ.தி.மு.க ஆட்சியில் ஈரோடு நகரில் உள்ள காவல்நிலையங்களில் அதுவும் யூனிபார்ம் அணியாத தனி பிரிவில் மட்டுமே இவர் பணியாற்றி வந்துள்ளார். சட்ட விரோத, சமூக விரோத கும்பல்கள் அனைத்திலும் இவருக்கு தொடர்பு உண்டு என்றும் அவர்கள் மூலம் பெறும் லட்சக்கணக்கான ரூபாய் மாமூல் பணத்தை உயர் அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து தரும் வேலையை செய்பவர் என்று போலீசார் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வந்தது. 

 

இந்நிலையில் வேல்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு பல புகார்கள் சென்றுள்ளது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்குமாரை கடந்த சில மாதங்களாக  கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், 20-ந் தேதி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் 10-க்கும் போலீசார் காலை 8 மணிக்கே வேல்குமார் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தீவிரமாக  சோதனையில் ஈடுபட்டனர். அவர் வீட்டில் இருந்த சில முக்கிய ஆவணங்கள், நிலங்கள் மற்றும் அசையா சொத்துக்களின் டாக்குமெண்ட்டுகள் வங்கியின் பாஸ்புக், செக்புக் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர். 

 

வேல்குமார் வங்கியில் டெபாசிட் செய்த பணம், அவரது லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு என பல விபரங்களை போலீஸ் வேல்குமாரிடமும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை செய்தார்கள். இவர் வீட்டில் ரகசிய அறைகளில் நகை, பணம் பதுக்கி வைத்துள்ளரா என்றும்  வீட்டின் அனைத்து பகுதிகளிலும் 20-ந் தேதி இரவு வரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஒருவர் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். வேல்குமாருக்கு சொந்தமான மற்றொரு வீடு  ஈரோடு முனிசிபல் சத்திரத்தில் உள்ளது. அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு முடிந்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை வேல்குமார் மீது எடுக்கப்படும் எனவும், வேல்குமாரோடு தொடர்பில் இருந்த சட்டவிரோத கும்பல் அவர்கள் மூலம் பெற்றவருமானம் அதை போலீஸ் அதிகாரிகள் யார் யார்க்கு பிரித்து கொடுத்தார் என கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் ஈரோடு போலீஸ் அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்