'ஜி ஸ்கொயர்' நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. இந்த நிலையில் அந்த நிறுவனம் வாங்கி இருக்கக்கூடிய இடங்களுடைய நிலவிவர பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை, எவ்வளவு பணப்பரிமாற்றம் செய்துள்ளது என்பது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் 50 குழுக்கள் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் சோதனையை அடுத்து அந்த குழுக்கள் கொடுக்கும் தகவல்கள் வருமான வரித்துறை ஆணையரிடம் ஒப்படைக்கப்படும். அதன் அடிப்படையில் மொத்தமாக சேர்த்து அறிக்கை தயாரிக்கப்பட்டு செய்தி குறிப்பாக வெளியிடுவார்கள். ஆனால் அதற்கு முன்பாக தற்போது முக்கியமான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் தெரிகிறது. ரொக்கப் பணம், பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.